இலங்கை தலைநகரில் தெற்காசியாவின் உயரமான கோபுரம் என்ற பெருமையை கொண்ட தாமரை கோபுரம்…!!!

தெற்காசியாவின் உயரமான கோபுரம் என்ற பெருமையை கொண்ட தாமரை கோபுரம் (லோட்டர்ஸ் டவர்) இலங்கை தலைநகர் கொழும்பில் கடந்த 16 செப்டம்பர் 2019 அன்று திறந்து வைக்கப்பட்டது.

தெற்காசியாவின் அதிஉயர்ந்த கோபுரமாக வியந்து பார்க்கப்படுகிறது தாமரைக் கோபுரம். நாட்டின் எந்தவொரு இடத்தில் இருந்தும் கொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் அனைவரதும் கண்களுக்கும் தொலைதூரத்திலிருந்து தெரியக் கூடியதாக தாமரைக் கோபுரம் அமைந்துள்ளது. இலங்கையைப் பொறுத்த வரை தாமரைக் கோபுரம் என்பது இனிமேல் சிறப்பு அடையாளமாகவே விளங்கப் போகிறது.

இதன் நிர்மாணப் பணிகள் 2012 ஆம் ஆண்டில் தொடங்கி விட்டன. இக்கோபுரத்தை பார்ப்பவர்களின் மனத்தில் பல வினாக்கள் எழுவதுண்டு.எவ்வாறு இந்தளவு உயரமாக கட்டப்பட்டது, இவ்வளவு பெரியதான கோபுரத்தில் ஆட்கள் எப்படி வேலை செய்வார்கள்? இவ்வளவு பெரியதான கோபுரம் ஏன் கட்டப்பட்டது?இவ்வாறு பலகேள்விகள் உருவாவது பொதுவானதே,

இக்கோபுரம் கொழும்பு, டி. ஆர். விஜயவர்தன மாவத்தையில் பேரவாவிக்கு மிக அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.அதாவது லேக் ஹவுஸ் நிறுவனத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் அருகாமையிலேயே அமைந்துள்ளது.

இக்கட்டடத்தின் 215 மீற்றர் உயரத்திற்கு லிப்ட் ஊடாக செல்வதற்கு சுமார் 2 நிமிடங்களே எடுக்கின்றன. இக்கோபுரத்தினால் எமது நாட்டுக்குப் புகழ் கிடைப்பதுடன் கொழும்பு நகரின் அழகை மேன்மைப்படுத்தும் கோபுரமாகவும் இது திகழும்.
ஆனால் தாமரைக் கோபுரத்தின் முழுமையான உயரம் 356.3 மீட்டராகும். இக்கோபுரம் தென் ஆசியாவின் மிக உயரமான கோபுரமாக நிமிர்ந்து நிற்கின்றது. அத்துடன், உலகிலேயே உயரமான கோபுரங்களில் ஒன்றாக இதுவும் காணப்படுகிறது.

தாமரைக் கோபுரத்தில் முதலாம் மாடியில் வர்த்தக் கடைத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.மேல் பகுதியில் 400 பேர் அமரக் கூடிய மாநாட்டு மண்டபம் உள்ளது. திருமண வரவேற்பு மண்டபம், ஆடம்பர அறைகள், ஹோட்டல்கள், மற்றும் கவனயீர்ப்பு பார்வையாளர் மண்டபம் உட்பட பூரண வசதிகள் நிறைந்ததாக இக்ேகாபுரம் காணப்படுகிறது.அத்துடன், தொலைத் தொடர்பாடல்கள் அருங்காட்சியகம் மற்றும் உணவு விடுதி போன்றன கோபுரத்தின் அடித்தளத்தில் அமைக்கப்படுகின்றன. கோபுரத்தின் நிர்மாணப் பணிகளில் சீன தொழிலாளர்களுடன் இலங்கை ஊழியர்களும் இணைந்து பணியாற்றினர்.

பல்வேறு பரிவர்த்தனை நிலையங்களை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள இந்த தாமரைக் கோபுரம் மிகவும் உயரமான தாமரை வடிவில் அமைக்கப்படும் கோபுரமாகவும் திகழவிருக்கிறது.தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரைக் கோபுரத்துக்காக ஒதுக்கப்பட்ட மொத்த செலவினம் 104 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இங்கு 1500 வாகனங்களை ஒரே தடவையில் நிறுத்தி வைக்கக் கூடியதாக பாரிய வாகனத் தரிப்பிடம் ஒன்றும் வர்த்தக கட்டடத் தொகுதியும் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன.

சீனாவின் எக்சிம் வங்கியின் நிதியுதவியுடன் 104.3 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தாமரைக் கோபுரம், 1148.3 அடி உயரத்தையும் 30,600 சதுர மீற்றர் விஸ்தீரணத்தையும் கொண்டதாக உள்ளது.தாமரைக் கோபுரத்தில் அயல்நாடுகளுக்கு எதிரான மின்னணு கண்காணிப்பு வசதி அடங்குவதாக வெளியான செய்தி நிராகரிக்கப்பட்டுள்ளது. இக்கோபுரப் பணியில் மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் 50 பொறியியலாளர்களும் பணியாற்றிஇருந்தார்கள். கட்டட நிர்மாணத்திற்கு இரும்பு 5000 தொன், கொங்கிறீட் 20,000 கனமீட்டர் உள்வாங்கப்பட்டுள்ளன.

இக்கோபுரத்தைச் சுற்றிலும் பேர வாவி இருப்பதனால் அத்திரவாரப் பகுதியின் ஸ்திரத்திற்கு ஆரம்ப கட்டங்களில் 4000 கனமீட்டர் கொன்கிறீட்டும், 400 தொன் இரும்பும் செலவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தாமரைக் கோபுரத்தில் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளுக்காக 350 மீற்றர் உயரமான பரிவர்த்தனை கோபுரங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், கண்காணிப்பு கூடம், தொலைத்தொடர்பு பரிவர்த்தனை நிலையங்கள் அனைத்தும் உள்ளடக்கியதாகவே அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோபுரத்திற்கு அதிவேக மின்சார லிப்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 85 முதல் 90 வரையிலான மாடிகளுக்கு சுமார் இரண்டே நிமிட குறுகிய நேரத்தில் செல்லக் கூடியதாக இருக்கும்.

வெளிநாடுகளில் இருந்தோ அல்லது தொலைதூரங்களில் இருந்தோ கொழும்புக்கு வருகின்ற எவரும் இனிமேல் தாமரைக் கோபுரத்தை ஒரு தடவை நெருங்கி அதன் வியத்தகு தோற்றத்தை ரசித்து விட்டு செல்லாமல் இருக்கப் போவதில்லை என்பது மட்டும் நிட்சயம்.